மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை எச்சரித்து அனுப்பிய ரெயில்வே போலீசார்
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் படிக்கட்டில் தொங்கிய கல்லூரி மாணவர்களை ரெயில்வே போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
சென்னை ரெயில்களில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்வது, தரைகளை உரசி கொண்டு செல்வது, ரெயில்களில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவும் தீபாவளி என்பதால் பட்டாசுகள் எடுத்து செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க சென்னை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை முதன்மை கமிஷனர் செந்தில் குமரேசன் உத்தரவிட்டார்.
இதையடுத்து பரங்கிமலை நிலைய ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்வது, நடைமேடையில் கால்களை உரசிச்செல்வது, கூரைமீது பயணம் செய்வது, கல்லூரி மாணவர்களுக்குள் ரயில் நிலையத்தில் சண்டை இடுவதை தடுப்பது போன்ற பணிகளை இந்த சிறப்பு தனிப்படை கண்காணித்து வருகிறது.
இந்த வருடம் ரயில்வே பாதுகாப்பு படை பரங்கிமலை நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் மீது இதுவரை 301 வழக்குகள் பதிவு செய்து ரூ. ஒன்றரை லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்யும் மற்றும் நடைமேடையில் கால்களை உரசிப்பயணம்செய்யும் சிறார்களின் பெற்றோர்களை நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் திடீரென சோதனை செய்த போது படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த கல்லூரி மாணவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்தனர். பின்னர் கல்லூரி மாணவர்களிடம் ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்வது சட்டப்படி குற்றம். ரெயிலில் ஏறியதும் உள்ளே சென்று விட வேண்டும். மீண்டும் தவறுகள் என எச்சரித்து அனுப்பினார்.