ரேஷன் கடை திறக்காததால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்
நித்திரவிளை அருேக ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரி நேரில் வந்து பூட்ைட உடைத்து பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.;
கொல்லங்கோடு,
நித்திரவிளை அருேக ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரி நேரில் வந்து பூட்ைட உடைத்து பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.
மூடி கிடந்த ரேஷன் கடை
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியில் அமுதம் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் பணி புரியும் ஊழியர்கள் சரியாக கடையை திறக்காமலும் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்காமலும் இருந்து வந்தனர். இது சம்பந்தமாக பல புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. மேலும், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அந்த ஊழியர்களை வட்ட வழங்கல் துறை அதிகாரி வேணுகோபால் இடமாற்றம் செய்தார். இதன்பின்பு 2 புதிய ஊழியர்கள் கடையில் பணியமர்த்தப்பட்டனர்.
இந்தநிலையில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இது வரை வழங்காமல் இருந்தது. இதனால் நேற்று காலையில் ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடைக்கு வந்தனர். ஆனால், நேற்றும் கடை திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் கடை முன்பு நீண்ட நேரம் காத்திருந்தனர்.
அதிகாரி நடவடிக்கை
அத்துடன் இதுகுறித்து வட்டவழங்கல் துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கிள்ளியூர் வட்ட வழங்கல் தாசில்தார் வேணுகோபால் சம்பவ இடத்துக்கு வந்தார். அவர் கடை திறக்கபடாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து ஊழியரை தொடர்பு கொண்டு பேசினார்.
அதிகாரி வந்திருப்பதை தெரிந்து கொண்ட ஊழியர் அலறியடித்து கொண்டு கடைக்கு வந்தார். அவர் கடையை திறக்க முயன்றபோது சாவி மாறி எடுத்து வந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பூட்டை சுத்தியலால் உடைத்து கடையை திறந்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க அதிகாரி கூறினார். அத்துடன் கடை ஊழியரை எச்சரித்து சென்றார்.
இந்த சம்பவத்தால் நேற்று காலை முதல் மதியம் வரை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.