போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

வேலூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விசாரணை நடத்த பிடித்துச் சென்றவர்களை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-25 17:09 GMT

வேலூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விசாரணை நடத்த பிடித்துச் சென்றவர்களை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருதரப்பினரிடையே மோதல்

வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் ஊர் நாட்டாண்மையை தேர்ந்தெடுப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது. ஏற்கனவே அவர்களுக்குள் தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி மதியம் 2 மணி அளவில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசியும் தாக்கிக் கொண்டனர். இதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தனித்தனியே புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இதில் தொடர்புடைய சுமார் 15 பேரை தேடி வருகின்றனர். அதே வேளையில் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அந்தப் பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் நேற்று தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையறிந்த அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, அழைத்துச் சென்ற 5 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கூறினர்.

அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அங்கு போலீஸ் நிலைய கேட் மூடப்பட்டு, ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 23-ந் தேதி நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினோம். விசாரணைக்கு பின்னர் அவர்களை விடுவித்துள்ளோம். மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து யாருக்காவது தகவல் கிடைத்தால் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கலாம். இந்த சம்பவம் தொடர்பாக தேவையில்லாமல் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். அவ்வாறு வீண் வதந்திகளை தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலோ. பரப்பினாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்