அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

கீரணி கண்மாய் ஆக்கிரமிப்பை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-30 18:26 GMT

போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், துறையூர் ஊராட்சி கீரணிப்பட்டி கிராமத்தில் கீரணிக்கண்மாய் உள்ளது. இந்த கீரணிக்கண்மாயில் தனிநபர் ஆக்கிரமித்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பட்டா பெற்று இருப்பதாகவும், அந்த பட்டாவை ரத்து செய்யக் கோரியும், ஆக்கிரமிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் பாசன கண்மாயில் ஆக்கிரமித்து பட்டா பெற்றுள்ளதை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதிகாரிகளிடம் வாக்குவாதம்

இந்நிலையில் பிரச்சினைக்குரிய கண்மாயை அளக்க கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அதிகாரி மற்றும் சர்ேவயர் ஆகியோர் இன்று அந்த கண்மாய்க்கு வந்தனர். அப்போது அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்ற நபரும் வந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கண்மாய்க்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீங்கள் எவ்வாறு முறையாக அளக்க முடியும்

சுமார் 350 ஏக்கர் பாசன வசதி கொண்ட இந்த கண்மாயை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து பிழைத்து வருகின்றனர். ஆனால் இந்த குளத்தை தனிநபர் எவ்வாறு பட்டா பெற்றார் என தெரியவில்லை. தற்போது கண்மாயில் தண்ணீர் உள்ள நிலையில், நீங்கள் எவ்வாறு முறையாக அளக்க முடியும். நாங்கள் மாவட்ட கலெக்டரிடம் பட்டாவை ரத்து செய்து கண்மாய் நீர் விவசாயிகளுக்கு பயன்படும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் மனு கொடுத்தோம்.

அதிகாரிகள் திரும்பி சென்றனர்

ஆனால் நீங்கள் தற்பொழுது அளக்க வந்துள்ளது ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுப்பதாக கருதுகிறோம். எனவே நீங்கள் கண்மாயை அளக்க கூடாது திரும்பி செல்லுங்கள். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ. போன்ற உயர் அதிகாரிகள் இந்த கண்மாயை பார்வையிட்டு கண்மாய்க்கு வரும் வரத்து வாய்க்கால் இந்த ஆக்கிரமிப்பால் தடைபட வாய்ப்புள்ளது என்பதை அறிந்து அவர்கள் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு பிரச்சினைக்குரிய கண்மாயை அளக்காமல் திரும்பி சென்று விட்டனர். கண்மாயை அளக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்