போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பெண்ணை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Update: 2023-04-19 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதுவை கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். உடனே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அசோக்குமார் மனைவி தேன்மொழி (வயது 36) என்பவர் கூறுகையில், நான் அதே பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகில் தோசை மாவு வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருது, என்னை சாராயம் விற்பதாக கூறி தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார். இதை தடுக்க வந்த எனது கணவர் அசோக்குமாரையும் அவர் திட்டி தாக்கினார். எனவே சப்- இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டார். தொடர்ந்து, இதுசம்பந்தமாக அவர், சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் மனு அளித்தார். மனுவை பெற்ற போலீஸ் அதிகாரிகள் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்