நெல்லை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த விவகாரம் தொடர்பாக, நெல்லை கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனுக்களை வழங்கினர்.

Update: 2023-01-18 20:15 GMT

மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த விவகாரம் தொடர்பாக, நெல்லை கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனுக்களை வழங்கினர்.

முற்றுகை

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலையில், மானூர் தாலுகா இரண்டுசொல்லான் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தி மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ''எங்கள் பகுதியை சேர்ந்த ஆரோன், ஆபிரகாம் ஆகிய 2 வாலிபர்கள் சம்பவத்தன்று மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அந்த சமூகத்தை சேர்ந்த சிலர் எங்கள் சமூகத்தை சேர்ந்த வாலிபர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஆரோனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தற்போது கல்லூரி மாணவரான அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த மானூர் போலீசார் எந்தவித கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.

கலெக்டர் அலுவலகம்

அதேபோல் கந்தசாமியாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தி மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ''எங்கள் சமூகத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ஆடு மேய்த்து கொண்டு இருந்தபோது மாற்று சமூகத்தை சோ்ந்த சிலர், எங்கள் சாலை வழியாக எதற்காக ஆடுகளை ஓட்டி செல்கிறாய். உனக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் ஆடுகளையும் தாக்கி விரட்டியுள்ளனர். இதனால் எங்கள் சமூக மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு கூட பாதுகாப்பு இல்லை. எனவே இதில் தொடர்புடைய சமூக விரோதிகள் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்