காஞ்சனகிரி மலை கோவிலை நிர்வகிப்பதில் பிரச்சினை
காஞ்சனகிரி மலை கோவிலை நிர்வகிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே காஞ்சனகிரி மலைக்கோயில் உள்ளது. இந்த மலைக்கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை நிலவி வருகிறது. இந்தநிலையில் நேற்று ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இரண்டு தரப்பினரும் தனித்தனியே சிப்காட் போலீசில் புகார் செய்தனர்.
முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற துணத்தலைவர் சுரேஷ் என்பவர் அளித்த புகாரில், லாலாபேட்டை மலை கோவில் வேலையை மேகநாதன் என்பவர் கவனித்து வந்ததாகவும், இந்தநிலையில் லாலாபேட்டையை சேர்ந்த கோடீஸ்வரன், பாலமுருகன், சந்திரன், பரந்தாமன், ஜெயக்குமார், மதி, விஜி, குணா உள்ளிட்டோர் பூட்டை உடைத்து சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிப்காட் போலீசார் கோடீஸ்வரன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல் லாலாபேட்டையை சேர்ந்த பாலமுருகன் என்பர் அளித்துள்ள புகாரில் நேற்று பங்குனி உற்சவத்தை முன்னிட்டு மலை கோவிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில், சமையல் வேலை செய்து கொண்டிருக்கும்போது, தன்னை அக்ராவரவரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற செயலாளர் வினோத் ஆகியோர் தாக்கியதாகவும், இன்னொரு முறை இங்கு வந்தால் உயிரோடு போக மாட்டாய் என மிரட்டியதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் அக்ராவரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், முகுந்தராயபுரம் ஊராட்சி செயலாளர் வினோத் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.