பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் மல்லிகை பூ விலை 'கிடுகிடு' உயர்வு-ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் மல்லிகை பூவின் விலை ‘கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது.;

Update: 2023-01-12 20:35 GMT

மல்லிகை பூ

எத்தனை பூக்கள் இருந்தாலும் மல்லிகை பூவுக்கு இருக்கும் 'மவுசு' எந்த மலருக்கும் இல்லை எனலாம். மல்லிகை பூவின் வாசனையும், அதன் வசீகரமும் ஆளை மயக்கும் தன்மை கொண்டவை. எந்த விழாவாக இருந்தாலும் அதில் மல்லிகை பூ முக்கிய அங்கம் வகிக்கும். பூக்களின் ராணியாக இருக்கும் மல்லிகை பூவுக்கு, அதிலும் மதுரை மல்லிக்கு தமிழகம் தாண்டி வெளிநாடுகளிலும் மவுசு அதிகம்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகை பூ உள்பட அனைத்து பூக்களுக்கும் அதிக தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது பனிக்காலம் என்பதால் பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் மல்லிகை பூ வரத்தும் குறைந்திருக்கிறது.

இதன் காரணமாக மல்லிகை பூ விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. சந்தைக்கு மிக குறைவாக மல்லிகை பூக்கள் வந்தாலும் அதை வாங்க சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

இதுகுறித்து சேலம் பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-

'கிடுகிடு' விலை உயர்வு

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ஓமலூர், காடையாம்பட்டி, கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, மல்லூர், மேச்சேரி போன்ற இடங்களில் இருந்துதான் அதிகளவில் மல்லிகை பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தற்போது பனிக்காலம் என்பதால், விளைச்சல் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் வழக்கமான வரத்தும் குறைந்திருக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவை அதிகம் இருக்கும் நிலையில் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மல்லிகை பூவின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. இதனால் 2 நாட்களுக்கு முன்பாக ரூ.1,500 வரை விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூ, தற்போது ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது.

மல்லிகை பூ போல, இதர பூக்களின் விலையும் கணிசமாகவே உயர்ந்திருக்கிறது. அந்தவகையில் முல்லை, ஜாதிமல்லி, கலர் காக்கட்டான், அரளி உள்ளிட்ட பூக்களும் விலை உயர்ந்துள்ளன. வாசமில்லா காட்டுமல்லி விலை 2 மடங்கு உயர்ந்திருக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மல்லிகை உள்பட அனைத்து பூக்களின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விலை நிலவரம்

சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை நிலவரம் (கிலோவில்) வருமாறு:-

மல்லி- ரூ.2,000, முல்லை-ரூ.2,000, சாமந்தி-ரூ.200, சம்பங்கி- ரூ.100, ஜாதிமல்லி- ரூ.1,000, அரளி- ரூ.360, வெள்ளை மற்றும் மஞ்சள் அரளி ரூ.360, நந்தி வட்டம்-ரூ.150, காக்கட்டான் (வாசமில்லா காட்டுமல்லி) - ரூ.1,000.

Tags:    

மேலும் செய்திகள்