ஆயுதபூஜையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை அதிரடி உயர்வு

நாளை ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.;

Update:2022-10-03 12:14 IST

கோப்புப்படம் 

மதுரை,

ஆயுத பூஜையின்போது தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் சுவாமி படங்களுக்கும் மற்றும் எந்திரங்களுக்கும் மாலைகள் மற்றும் பூக்களை அணிவித்து பூஜை செய்வது வழக்கம். இதனால் பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். இதையொட்டி பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி சென்று பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.

நாளை ஆயூத பூஜை விழா என்பதால் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க இன்று ஏராளமானோர் திரண்டனர். மல்லிகை, பிச்சி உள்ளிட்ட வண்ண வண்ண மலர்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் ஆர்வத்துடன் மலர்களை வாங்கி சென்றனர்.

கடந்த வாரம் விற்கப்பட்ட விலையை விட இன்று இருமடங்கு விலை உயர்ந்து பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை பூ கடந்த வாரம் கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்பட்டது. இன்று மல்லிகை கிலோ ரூ.1,000 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி ரூ.800-க்கும், முல்லை ரூ.900-க்கும், அரளி ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், செண்டு பூ, மரிக்கொழுந்து ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் மற்ற மலர்களும் இரு மடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தற்போது பூக்கள் வரத்து அதிகமாக உள்ளதால் பூக்களின் விலை ஓரளவு கட்டுக்குள் உள்ளது. கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று மல்லிகை பூக்கள் கிலோ ரூ.3 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

தற்போது மல்லிகை பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதால் விலை கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்தனர். இதே போல் ஆயத பூஜையை முன்னிட்டு மதுரை மார்க்கெட்டுகளில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, பேரிக்காய் உள்ளிட்ட பழ வகைகள் ரூ.20 முதல் ரூ.50 வரை அதிகரித்துள்ளன. இதே போல் வாழைக்கு இலை, வாழைக்கன்று, தேங்காய், அவல், பொரி உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் களைகட்டி உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்