ஆடி வெள்ளியையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை `கிடுகிடு' உயர்வு
ஆடி வெள்ளியையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை `கிடுகிடு' என உயர்ந்துள்ளது.
சென்னை,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், ஓசூர் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆடி அமாவாசை தொடங்கியதில் இருந்து பூக்கள் விலை கணிசமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் இன்று (வெள்ளிக்கிழமை) ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்து இருக்கிறது.
2 தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ நேற்று ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல், கனகாமரம் பூ கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து, ரூ.300-க்கும், முல்லைப்பூ ரூ.150 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.450-க்கும், ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி ரூ.240-க்கும் விற்பனை ஆனது.
மேலும் ஒவ்வொரு பூக்களும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.100 வரை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, நேற்று அல்லி ரூ.300-க்கும், சம்மங்கி ரூ.120 முதல் ரூ.150 வரைக்கும், செண்டுமல்லி ரூ.50-க்கும், ரெட் ரோஸ் ரூ.100-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.80 முதல் ரூ.100 வரைக்கும் விற்கப்பட்டது.
வரத்து குறைவு, ஆடி வெள்ளியையொட்டி பூக்களின் விலை அதிகரித்து இருப்பதாகவும், இனி வரக்கூடிய நாட்களிலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் மொத்த வியாபாரி அருள் விசுவாசம் தெரிவித்தார்.