ஆஸ்பத்திரிக்கு 15 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற கர்ப்பிணி
சாலை வசதி இல்லாததால் அணைக்கட்டு அருகே பிரசவத்திற்காக 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே கர்ப்பிணி ஆஸ்பத்திரிக்கு சென்றார்.;
பிரசவ வலி
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜார்த்தான்கொல்லை ஊராட்சி, முத்தன் குடிசை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 26). இவரது மனைவி சிவகாமி (22). இந்த தம்பதியினருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
சிவகாமி தற்போது மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.
நடந்தே சென்றார்
போதுமான சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் மூலம் அவரை அழைத்துச் செல்ல முடியாத சூழல் நிலவியது. முத்தன் குடிசை கிராமத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டுமானால் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒடுகத்தூர், 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நம்மியம்பட்டு அல்லது 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுக்கம்பாறைக்குதான் செல்ல வேண்டும்.
பிரசவவலி அதிகரித்ததால் சிவகாமியை முத்தன்குடிசை கிராமத்தில் இருந்து நடை பயணமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். கர்ப்பிணி பிரசவ வலியோடு சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு தெள்ளை மலை கிராமம் வழியாக நடந்தே கணியம்பாடி அடுத்த துத்திக்காட்டிற்கு வந்தார்.
சாலை வசதி
பின்னர் அங்கிருந்து சிவகாமியை அவரது உறவினர்கள், ஆட்டோ மூலம் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
எங்களது நீண்ட கால சிரமத்தை போக்கும் வகையில் அரசாங்கம் சாலை வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.