எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை நாளை மறுநாள் முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
மொத்தம் 25 மதிப்பெண்களுக்கு இந்த செய்முறைத் தேர்வு நடைபெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை என இருவேளைகளில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவியல் பாடத்தில் கருத்தியல் தேர்வில் 75 மதிப்பெண்களுக்கு 25 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வில் 25 மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்டை நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.