ஒற்றை தலைமையை முடிவு செய்யும் அதிகாரம் பொதுக்குழுவுக்குத்தான் உள்ளது -இன்பதுரை பேட்டி

ஒற்றை தலைமையை முடிவு செய்யும் அதிகாரம் பொதுக்குழுவுக்குத்தான் இருக்கிறது என்று இன்பதுரை தெரிவித்தார்.

Update: 2022-06-19 23:50 GMT

சென்னை,

கோர்ட்டுக்கு சென்று பொதுக்குழுவை நடத்த விடாமல் முடக்கிவிடுவோம் என்று கூறுகிறார்கள். அ.தி.மு.க. சட்டவிதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? இயற்கை விதிமுறைக்கு உட்பட்டு இருக்கிறதா? என்றுதான் கோர்ட்டு பார்க்கும். இந்திய தேர்தல் ஆணையம் என்ன கேட்கும் என்றால் ஒரு அமைப்பை மாற்றுவதாக இருந்தால், அதற்கான விதிமுறைகளின்படி மாற்றி இருக்கிறீர்களா? என்றுதான் கேட்கும். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. சட்டத்தில் ஒற்றை தலைமைக்கும் இடம் இருக்கிறது. அதன்படிதான் ஜெயலலிதா செயல்பட்டார்.

அ.தி.மு.க. வுக்கு என்று ஒரு சட்டம் இருக்கிறது. அதில் பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது. கட்சியை வழிநடத்தி செல்கிற சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரமும் பொதுக்குழுவுக்கு இருக்கிறது. ஏற்கனவே 5 ஆண்டுகளுக்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இது ஒன்றும் 5 ஆண்டு ஒப்பந்தம் அல்ல.

ஒன்றிய, மாவட்ட செயலாளர்கள் எப்படி 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பின்னரும் அவர்களை இடையில் நீக்கும் அதிகாரம் எப்படி இருக்கிறதோ, அதேபோன்று யாரை வேண்டுமானாலும் கட்சியின் சட்ட விதிகளை பயன்படுத்தி, பொதுக்குழு அதிகாரத்தை பயன்படுத்தி மாற்றுவதற்கு அதிகாரம் இருக்கிறது.

பொதுக்குழுவுக்கே அதிகாரம்

உதாரணத்திற்கு ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவை பொதுச்செயலாளராக பொதுக்குழு நியமித்தது. மீண்டும் அவரை அப்பொறுப்பில் இருந்து பொதுக்குழு நீக்கியது. ஒற்றை தலைமை என்பது ஒன்றும் புதிது அல்ல. அது அ.தி.மு.க. சட்ட விதிகளில் ஏற்கனவே இருக்கிறது. ஜெயலலிதா அதைத்தான் கடைபிடித்து வந்தார்.

இடைக்கால ஏற்பாடாக நாம் சில ஏற்பாடுகளை செய்து வந்தோம். இப்போது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேவையில்லை என்று தொண்டர்கள் கருதுகிறார்கள். இதுகுறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இருக்கிறது. இது முற்றிலும் எண்ணிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்