மின்கம்பி அறுந்து விழுந்து 3 நாட்களாக மின்வினியோகம் தடை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மின்கம்பி அறுந்து விழுந்து 3 நாட்களாக மின்வினியோகம் தடை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர் .;

Update: 2023-07-13 10:23 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் செவ்வாப்பேட்டை அடுத்த வீரராகவபுரம் கிராமத்தில் கடந்த 10-ந் தேதி மாலை உயர் மின்னழுத்த கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து குடியிருப்பு பகுதியில் சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அறுந்த மின் கம்பியை சரிசெய்ய முயன்றபோது அப்பகுதியில் வசிக்கும் ஒரு தரப்பினர் எங்கள் பகுதி வழியாக மின்சாரம் செல்லக்கூடாது வேறு எந்த பக்கமாவது எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினர். இதனால் சீரமைப்பு பணி தடைபட்டது. எனவே அந்த பகுதியில் 3 நாட்களாக மின் வினியோகம் தடையானது. குழந்தைகள், பள்ளி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டு இந்த பிரச்சினையை சரி செய்து உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்து கூறி உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்