கனமழை காரணமாக மின்கம்பம் உடைந்து சாலையில் விழுந்தது

கரூரில் கனமழை காரணமாக மின்கம்பம் உடைந்து சாலையில் விழுந்தது. இதனால் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கனமழை

Update: 2022-06-18 18:54 GMT

கனமழை

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கரூரில் கடந்த 16-ந்தேதி கனமழை பெய்தது. இதனால் சுங்ககேட் கணபதி நகரில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினமும் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது.இதனால் கரூரில் பல்வேறு இடங்களில் ஆறுபோல் மழைநீர் ஓடியது. இந்நிலையில் கனமழை காரணமாக கரூர் காமாட்சியம்மன் கோவில் நடுத்தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விபத்து தவிர்ப்பு

இதனையடுத்து அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. ெபரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் வந்து சாலையில் விழுந்து கிடந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் வைத்து, மின்கம்பிகளை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

லாலாபேட்டை

லாலாபேட்டை பகுதியில் நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் லாலாபேட்டை ெரயில்வே கேட் அருகே உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட கள்ளப்பள்ளி ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். லாலாபேட்டை பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நொய்யல்

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குறுக்குச்சாலை, அத்திப்பாளையம், குப்பம், குந்தாணிபாளையம், நத்தமேடு, உப்புபாளையம், புன்னம்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இந்த மழையால் வெயிலின் தக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. கிராமப்புறங்களில் வாடிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. நொய்யல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கரூர்-59.3, அரவக்குறிச்சி-12, அணைப்பாளையம்-20, க.பரமத்தி-65, குளித்தலை 41, தோகைமலை-1, கிருஷ்ணராயபுரம்-16, மாயனூர்-22, பஞ்சப்பட்டி-10.4, மைலம்பட்டி-3.

Tags:    

மேலும் செய்திகள்