சாலையில் கிடந்த செல்போனை பெண்ணிடம் ஒப்படைத்த போலீஸ் ஏட்டு
திண்டுக்கல்லில், சாலையில் கிடந்த செல்போனை பெண்ணிடம் போலீஸ் ஏட்டு ஒப்படைத்தார்.;
திண்டுக்கல் சவேரியார்பாளையத்தை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு தாமோதரன். நேற்று காலை 7 மணிக்கு இவர், தனது மோட்டார்சைக்கிளில் பணிக்கு புறப்பட்டு சென்றார். பேகம்பூர் பகுதியில் சென்ற போது சாலையில் விலை உயர்ந்த செல்போன் ஒன்று கிடந்தது. அதை பார்த்த ஏட்டு தாமோதரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி செல்போனை எடுத்தார்.
ஆனால் சாலையில் விழுந்ததில் செல்போன் செயல்படாததால், அது யாருடையது என்பதை கண்டறிய முடியவில்லை. இதனால் அந்த செல்போனில் இருந்த சிம்கார்டை எடுத்து ஏட்டு தாமோதரன் தனது செல்போனில் பொருத்தினார். சிறிது நேரத்தில் அவர் எதிர்பார்த்தது போன்றே அந்த எண்ணுக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் மரியநாதபுரத்தை சேர்ந்த ரெனில்டா குழந்தை தெரசா என்பவர் பேசினார்.
மேலும் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது செல்போன் தவறிவிட்டதாக கூறினார். இதைத்தொடர்ந்து ரெனில்டா குழந்தை தெரசாவை நேரில் அழைத்து, ஏட்டு தாமோதரன் செல்போன் மற்றும் சிம்கார்டு ஆகியவற்றை ஒப்படைத்தார். அவற்றை பெற்றுக் கொண்ட ரெனில்டா குழந்தை தெரசா, போலீஸ் ஏட்டுக்கு நன்றி தெரிவித்தார்.