ஆற்றின் கரையோர மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும்; வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆற்றின் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

Update: 2023-09-23 18:45 GMT

வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆற்றின் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலைய கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் தலைமை தாங்கி பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் அனைத்து தாழ்வான பகுதியில் உள்ள மக்களை வடகிழக்கு பருவமழை காலங்களில் எவ்வாறு பத்திரமாக மீட்பது என்பது தொடர்பாகவும், நீர்நிலைகளில் தற்போதைய நிலை, மதகுகளின் தற்போதைய நிலை ஆகியவை குறித்தும் கேட்டறியப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு துறையினர், முதல்நிலை பொறுப்பாளர்கள் ஆகியோர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, குடிதண்ணீர், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில் ஆற்றின் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மாவட்ட அளவிலான பேரிடர் மீட்பு குழுவினர், முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும், தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் ரப்பர் படகு, லைப்பாய், லைப் ஜாக்கெட் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவும் பவர் ஷா, காங்கிரீட் கட்டர் மற்றும் பல்வேறு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என கேட்டறியப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சி மூலம் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது? என்பது குறித்தும் கேட்டறியப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்