ரெயில் பெட்டி படியில் 14 கிலோ மீட்டர் தொங்கியபடி சென்ற பயணி

நெல்லையில் இருந்து புறப்பட்ட போது கதவு பூட்டியிருந்ததால் ரெயில் பெட்டி படியில் 14 கிலோ மீட்டர் தொங்கியபடி சென்ற பயணியை பத்திரமாக மீட்ட ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது;

Update: 2022-11-22 22:12 GMT

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமைதோறும் கொங்கன் ரெயில்வே வழியாக மும்பை தாதருக்கு வாராந்திர விரைவு ெரயில் இயக்கப்படுகிறது. சம்பவத்தன்று அந்த ரெயிலில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய வேண்டிய சரவண அருணாசலம் என்ற பயணி தாமதமாக நெல்லை ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவர் நடைமேடை உள்ளே நுழைந்ததும் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. மும்பை செல்லவேண்டிய சரவண அருணாசலம், என்ன செய்வது என்று புரியாமல் ஓடிச்சென்று ரெயிலின் கடைசி பெட்டியின் வாசலில் கைப்பிடியைப் பிடித்தார். அந்த சமயத்தில் ரெயில் வேகம் எடுத்தது. அப்போது தான் அந்த பெட்டி பூட்டப்பட்டிருப்பதை சரவண அருணாசலம் கவனித்து பதறினார். இதனால், அவரால் இறங்கவோ, உள்ளே செல்லவோ முடியாமல் தவித்தபடியே வாசல்படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தார்.

நெல்லை ரெயில் நிலையத்தின் நடைமேடை இறுதி பகுதியில் நின்றபடியே, ஓடும் ெரயிலில் ஏதும் குறைபாடு இருக்கிறதா? என கண்காணிக்கும் ெரயில் பெட்டி பராமரிப்பு பணியாளர்கள் ஞானசேகரன், ராமச்சந்திரன் ஆகியோர் பயணி தொங்கிக் கொண்டு செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த ரெயில் அடுத்ததாக கோவில்பட்டி ரெயில் நிலையத்தில்தான் நிற்கும். அதற்கு 65 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். இதனால் அந்த பயணியால் அவ்வளவு தூரம் வாசலில் தொங்கியபடி பயணிப்பது ஆபத்தில் முடியும் என்பதை உணர்ந்த பராமரிப்பு பணியாளர்கள் உடனடியாக நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அதற்குள் ரெயில் 14 கிலோ மீட்டர் தூரம் சென்றுவிட்டது. எனினும் பயணிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை கவனத்தில் கொண்டு, ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

பின்னர் சரவண அருணாசலத்துக்கு அறிவுரை கூறி அவருடைய இருக்கையில் ரெயில்வே ஊழியர்கள் அமர செய்தனர். பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில் பயணியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் உடனடியாக செயல்பட்ட நெல்லை ரெயில் நிலையத்தின் ரெயில்பெட்டி பராமரிப்பு மேற்பார்வையாளர் பாலமுருகன், ஊழியர்கள் ஞானசேகரன், ராமச்சந்திரன் ஆகியோரை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் நேரில் அழைத்துப் பாராட்டினார். மேலும் அவர்களுக்கு ரொக்க பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்