அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன

மெலட்டூர் பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன.;

Update: 2022-08-25 20:04 GMT
தஞ்சை மாவட்டம் பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை விவசாய பணிகளுக்கு உகந்ததாக இருக்கும் என்று கருதப்பட்டாலும் ஒரு சில இடங்களில் பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர் மழையின் காரணமாக ஆலங்குடி பகுதி பிராந்தை கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் அப்படியே வயலில் சாய்ந்துள்ளன. மேலும், பல வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் நெய்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொள்முதல் நிலையம்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், மெலட்டூர் அருகே உள்ள களக்குடி அரசு கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படாததால் அறுவடை பருவம் தாண்டியும் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் உள்ளனர். இதேபோல இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி வீணாகி மகசூல் குறைந்து பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஆகவே, களக்குடி அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்