ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து அதிகாரி உள்பட 2 பேர் படுகாயம்
திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து அதிகாரி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து அதிகாரி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிலிண்டர் வெடித்தது
திருச்சி கோர்ட்டு வளாகம் அருகே மாவட்ட தீயணைப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்திலேயே கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளது. இங்கு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என்று 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் அனைவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தீ விபத்தின் போது புகைமூட்டத்துக்குள் சென்று தீயை அணைக்க பயன்படுத்தும் சிறிய ஆக்சிஜன் சிலிண்டருக்கு, பெரிய சிலிண்டரில் இருந்து ஆக்சிஜன் நிரப்பும் பணியில் தீயணைப்பு வீரர் பிரசாந்த் ஈடுபட்டார். அப்போது, அந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு வீரர் பிரசாந்த், தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணன் ஆகியோருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
2 பேர் படுகாயம்
ரத்தவெள்ளத்தில் படுகாயம் அடைந்து கிடந்த 2 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சிலிண்டர் வெடித்த சத்தம் அருகில் உள்ள கோர்ட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் பலரும் வெடிகுண்டு வெடித்ததாக கருதி ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் செசன்சு கோர்ட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீயணைப்பு நிலையத்தில் சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.