விசைப்படகை பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி உரிமையாளர் பலி
நித்திரவிளை அருகே விசைப்படகு பழுதுபார்ப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி உரிமையாளர் பரிதாபமாக பலியானார்.;
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே விசைப்படகு பழுதுபார்ப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி உரிமையாளர் பரிதாபமாக பலியானார்.
விசைப்படகு உரிமையாளர்
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் சேசடிமை (வயது 38), விசைப்படகு உரிமையாளர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் தனக்கு சொந்தமான விசைப்படகை பரக்காணியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் நிறுத்தி வைத்து பழுதுபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
மின்சாரம் தாக்கியது
இந்த நிலையில் நேற்று காலையில் விசைப்படகில் வெல்டிங் பணிகள் நடந்துள்ளது. இந்த பணியை பார்ப்பதற்காக சேசடிமை சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த மின்சார ஒயரை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் சேசடிமை தாமிரபரணி ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் இதுபற்றி நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விைரந்து வந்த போலீசார் சேசடிமையை மீட்டு இருசக்கர வாகனத்தில் ஏற்றி சிறிது தூரம் சாலைப்பகுதி வரை எடுத்துச் சென்று பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சேசடிமை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
சோகம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
படகு பழுதுபார்ப்பு பணியின்போது உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பும் இதே பகுதியில் மின்சாரம் தாக்கி வள்ளவிளையை சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.