புதிய பனியன் ஆர்டர்கள் அதிகரிக்கும்

புதிய பனியன் ஆர்டர்கள் அதிகரிக்கும்

Update: 2022-11-02 10:29 GMT

திருப்பூர்

நூல் விலை குறைந்து சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதால் புதிய ஆர்டர் வருகை அதிகரிக்கும். இதனால் பனியன் தொழில் சிறப்பாக இருக்கும் என்று தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பனியன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

பனியன் உற்பத்திக்கு முதுகெலும்பாக உள்ள நூல் விலை கடந்த காலங்களில் அபரிமிதமான உயர்வால் புதிய ஆர்டர்களை எடுத்து செய்ய பனியன் உற்பத்தியாளர்கள் தவிர்த்தனர். இதன்காரணமாக பனியன் உற்பத்தி குறைந்தது. தொழிலாளர்கள் வேலையிழந்தனர். குறிப்பாக 70 சதவீதம் பின்னலாடை உற்பத்தி திருப்பூர் மாநகரில் பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு பனியன் ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி வரும். பனியன் தொழில் புதிய எழுச்சியை பெறும் என்று பனியன் உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். இந்தநிலையில் நூல் விலை குறைந்து வருவது திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.40 நூல் விலை குறைந்த நிலையில் இந்த மாதம் கிலோவுக்கு மேலும் ரூ.20 குறைந்துள்ளது பனியன் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியையும், புதிய உத்வேகத்தையும் அளித்திருக்கிறது.

புதிய ஆர்டர்கள் வருகை

இந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் புதிய ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி வரத்தொடங்கியிருக்கிறது. தயக்கமின்றி ஆர்டர்களை எடுத்து செய்ய உற்பத்தியாளர்கள் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஆயத்தமாகி வருகிறார்கள். நூல் விலை குறைவு குறித்து பனியன் உற்பத்தியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் (பியோ) சக்திவேல்:-

நூல் விலை இந்த மாதம் கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது. ஐரோப்பா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து புதிய ஆர்டர்கள் திருப்பூருக்கு வரத்தொடங்கியிருக்கிறது. நூல் விலை குறைப்பால் திருப்பூருக்கு அதிகப்படியான ஆர்டர்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. வடஇந்திய நூற்பாலைகளும் நூல் விலையை குறைத்துள்ளது. ஆர்டர் வரும் இந்த நேரத்தில் நூல் விலை குறைந்துள்ளது வரவேற்கக்கூடியதாக அமைந்துள்ளது.

வர்த்தக விசாரணை அதிகரிப்பு

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன்:-

நூல் விலை ரூ.20 குறைந்தது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து புதிய ஆர்டர்களுக்கான வர்த்தக விசாரணை வரத்தொடங்கியிருக்கிறது. நூல் விலை குறைந்ததால் உற்பத்தி செலவை குறைத்து நாம் ஆடைகளை தயாரித்து வழங்க முடியும். இதன்காரணமாக நமது போட்டி நாடுகளான வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சென்ற பனியன் ஆர்டர்கள், திருப்பூர் நோக்கி வரத்தொடங்கும். தற்போது டாலர் மதிப்பு அதிகமாகியுள்ளது ஏற்றுமதிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

வருகிற ஜனவரி மாதத்தில் புதிய ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைக்கும். தற்போது புதிய ஆர்டர்களுக்காக வெளிநாட்டை சேர்ந்த பெரிய, பெரிய பிராண்டட் நிறுவனங்கள், வர்த்தகர்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தக விசாரணை அதிகமாக மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணைகள் அனைத்தும் புதிய ஆர்டர்களாக நமக்கு நிச்சயம் மாறும் என்று எதிர்பார்க்கிறோம். வங்கதேசத்தை நோக்கி சென்ற பெரிய, பெரிய நிறுவனங்கள் திருப்பூருக்கு வரத்தொடங்கியிருக்கிறார்கள்.

நல்ல சந்தர்ப்பம்

சைமா தலைவர் ஈஸ்வரன்:-

நூல் விலை குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது. உள்நாட்டு பனியன் வியாபாரத்தை பெருக்குவதற்கான ஏற்பாடுகளை இனியும் காலம்கடத்தாமல் நாம் மேற்கொள்ள வேண்டும். இனியும் நூல் விலை குறையும் என்று நாம் காத்திருக்கக்கூடாது. நூற்பாலைகள் முடிந்தவரை நூல் விலையை குறைத்துள்ளன. புதிய பருத்தி வரத்து அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அதை கணக்கில் கொண்டு நூல் விலையை குறைத்துள்ளனர். பனியன் தொழிலை விரிவாக்கம் செய்ய தற்போது நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

முறையாக தொழில் செய்து நல்ல முறையில் மார்க்கெட்டிங் செய்து உற்பத்தியில் ஈடுபட வேண்டும். இதற்கு பிறகு சந்தை வியாபாரம் எப்படி இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வியாபாரத்தை நிலையான தன்மைக்கு கொண்டு செல்வது அவசியம். அப்படி செய்தால் தான் பனியன் தொழில்துறை ஆக்கப்பூர்வமானதாக அமையும். புதிய ஆர்டர்கள் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையுள்ளது. தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

நூற்பாலைகள் உணர வேண்டும்

டீமா சங்க தலைவர் முத்துரத்தினம்:-

நூல் விலை ரூ.20 குறைந்ததை வரவேற்கிறோம். புதிய ஆர்டர்களை ஒப்பந்தம் செய்ய இது வசதியாக அமையும். கடந்த காலங்களில் நூல் விலையேற்றதால் ஒரு சீசனுக்கான ஆடை உற்பத்தியை நாம் இழந்து விட்டோம். வரும் காலங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி உள்நாட்டு ஆர்டர்கள் வருகை அதிகரிக்கும். அதை நாம் தைரியமாக எடுத்துச்செய்ய முடியும். வெளிநாட்டு ஆர்டர்கள் வருகையும் அதிகரிக்கும். நூல் விலை இதே நிலையில் நீடிக்க வேண்டும். அப்போது தான் புதிய ஆர்டர்களை எடுத்துச்செய்து தொழிலை மீட்க முடியும். 70 சதவீதம் பாதிக்கப்பட்ட தொழிலை சரி செய்ய முடியும்.

புதிய ஆர்டர் ஒப்பந்தம் செய்த பிறகு நூல் விலை உயர்ந்து விட்டால் மீண்டும் வீழ்ச்சியை சந்திக்க முடியும். இதை நூற்பாலைகள் உணர்ந்து விலையேற்றத்தை செய்யக்கூடாது. நியாயமான விலையில் நூல் விற்பனை செய்ய வேண்டும். புதிய ஆர்டர்கள் வரத்தொடங்கினால் மட்டுமே பனியன் தொழில் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் வளர்ச்சியடையும். தற்போது சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நூற்பாலைகள் இனி வரும் காலங்களில் தங்கள் தேவைகளை மத்திய, மாநில அரசுகளிடம் தெரிவித்து பெற வேண்டும். செயற்கை விலையேற்றத்தை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்