கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டியது அவசியம் எனவும், கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.;

Update: 2022-06-12 22:14 GMT

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 30-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

4 கோடி பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 11 கோடியே 19 லட்சத்து 22 ஆயிரத்து 568 ஆகும். இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 93.91 சதவீதமும், 2-வது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 83.11 சதவீதமும் ஆகும். இதேபோல் முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் 42 லட்சத்து 54 ஆயிரத்து 738 பேரும், 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்கள் 1 கோடியே 21 லட்சத்து 60 ஆயிரத்து 824 பேரும் உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 29 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. இதன் மூலம் 4 கோடியே 30 லட்சத்து 29 ஆயிரத்து 634 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அந்தவகையில் 30-வது தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது இந்த முகாமில் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசி என்ற வகையில் 60 வயதை கடந்தவர்கள், 60 வயதை கடந்து இணை நோயுள்ளவர்கள், முன்களபணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

தப்பிக்க ஒரே வழி

தடுப்பூசிகள் மட்டும்தான் இந்த கொரோனாவில் இருந்து நாம் தப்பிக்க ஒரே வழி. இதனால்தான் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உயிரிழப்பு இல்லாத நிலை நீடித்து வருகிறது. இருப்பினும் 22 என்ற அளவில் குறைந்த தொற்று தற்போது மீண்டும் 200-ஐ தாண்டியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்து 56 என தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. எனவே பொதுநிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள், பொது இடங்களில் முககவசங்களை அணிய வேண்டுமென முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்