தீவட்டிப்பட்டியில் பழமையான ஆலமரம் முறிந்து ரோட்டில் விழுந்தது போக்குவரத்து பாதிப்பு
தீவட்டிப்பட்டியில் பழமையான ஆலமரம் முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
ஓமலூர்.
தீவட்டிப்பட்டியில் பொம்மிடி ரோட்டில் நாச்சினம்பட்டி பிரிவு ரோடு அருகே 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் நேற்று தானாக அடியோடு முறிந்து ரோட்டில் விழுந்தது. இதில் மின்கம்பங்கள் கீழே விழுந்து சேதமானது. இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் தீவட்டிப்பட்டி- பொம்மிடி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று 2 மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இந்த இடத்தில் அரசு மதுபான கடைகள் 2 உள்ளன. அதில் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு போதையில், பழமையான மரம் என்பதால் மரத்தில் உள்ள பொந்துகளில் மதுபான பாட்டில்களை வைத்து சருகுகளை போட்டு தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் மரம் சிறிது, சிறிதாக எரிந்து தற்போது அடியோடு சாய்ந்து விட்டது' என்றார்கள்.