குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க வந்த முதியவர்
நில மோசடி புகாரில் நடவடிக்கை கோரி குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.;
விருதுநகர்,
அருப்புக்கோட்டை அருகே உள்ள சுத்தமடம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 61). இவரது தாத்தா முத்தையா கவுண்டர் பெயரில் பந்தல்குடி அருகே இருந்த 2 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த முத்தையா கவுண்டர் மகன் வேலுச்சாமி என்பவர் கடந்த 1982-ம்ஆண்டு போலி ஆவணங்கள் தயாரித்து வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனை பத்திரத்தை ரத்து செய்யக்கோரி வருவாய்த்துறை, பத்திர பதிவுத்துறை மற்றும் போலீசாரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நேற்று பாண்டுரங்கன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீக்குளிக்கும் எண்ணத்துடன் பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை தடுத்து அழைத்து சென்றனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாசில்தாரை சந்திக்குமாறு அதிகாரிகள் பாண்டுரங்கனிடம் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.