கைத்தறி நெசவாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறதுகலெக்டர் பேச்சு

கைத்தறி நெசவாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று நாகர்கோவிலில் நடந்த தேசிய கைத்தறி தின விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.;

Update:2023-08-08 00:45 IST

நாகர்கோவில்:

கைத்தறி நெசவாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று நாகர்கோவிலில் நடந்த தேசிய கைத்தறி தின விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

கைத்தறி தின விழா

குமரி மாவட்ட கைத்தறித்துறை மற்றும் சென்னை நெசவாளர் சேவை மையம் சார்பில் 9-வது தேசிய கைத்தறி தின விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

இதை தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில்,"தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கைத்தறி தொழிலில் அதிகமான நெசவாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்போது நெசவாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தும் பொருட்டு அவர்களின் பெருமையை பறை சாற்றுவதற்காக தேசிய கைத்தறி தினவிழா கொண்டாடப்படுகிறது" என்றார்.

கடன் தொகை

இதை தொடர்ந்து நெசவாளர் நல்வாழ்வு திட்டங்களான முத்ரா திட்டத்தின் கீழ் 12 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்திற்கு கடன் தொகையும், 10 நெசவாளர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான அனுமதி ஆணைகளையும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் 36 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். மேலும் 10 திறன்மிகு நெசவாளர்கள் மற்றும் 5 மூத்த நெசவாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

முன்னதாக அகஸ்தீஸ்வரம் கைத்தறி குழுமம் மூலம் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜவுளி ரகங்கள் கலெக்டர் அலுவலக உள்புற நுழைவு வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதை கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டார்.

விழாவில் வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், சென்னை நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் ஹிரா லால், கைத்தறி துறை உதவி இயக்குனர் வரதராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்