புதுமண தம்பதி சென்ற கார் குளத்தில் கவிழ்ந்தது
விக்கிரமசிங்கபுரம் அருகே புதுமண தம்பதி சென்ற கார் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே புதுமண தம்பதி சென்ற கார் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புதுமண தம்பதி
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 25). இவர் விருதுநகரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி இந்திரா (23). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்கள் நேற்று மாலையில் விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் கஸ்பா பகுதியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.
குளத்தில் கவிழ்ந்தது
சிவந்திபுரம் பகுதியில் சென்றபோது அங்குள்ள அலங்காரி அம்மன் கோவில் குளத்துக்குள் எதிர்பாராதவிதமாக கார் பாய்ந்து கவிழ்ந்தது. உடனே அப்பகுதியினர் விரைந்து சென்று, குளத்துக்குள் இறங்கி காரில் இருந்த தம்பதியை பத்திரமாக மீட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.