பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் விசாரணை

பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து அவரது பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய குழுவினர் நேரில் விசாரணை நடத்தினர்;

Update: 2022-07-27 17:58 GMT

சின்னசேலம்

மாணவி மர்ம சாவு

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந்தேதி மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பள்ளியை போராட்டக்காரர்கள் தீ வைத்து சூறையாடினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தேசிய குழந்தைகள் ஆணையக்குழு

இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் பிரியங்க் கானூங்கோ தலைமையில் உறுப்பினர்கள் கார்த்தியாயினி, சுதீப் மற்றும் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவி சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினர்கள் துரைராஜ், டாக்டர் சரண்யா ஜெயக்குமார், முரளிகுமார் ஆகிய 7 பேரை கொண்ட குழுவினர் நேற்று காலை 11.30 மணியளவில் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளிக்கு வந்தனர்.

பின்னர் இவர்கள் மாணவி தரையில் இறந்து கிடந்த இடத்தை பார்வையிட்டு, அதுபற்றி உடன் இருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து பள்ளியின் 3-வது தளத்தில் மாணவி தங்கி இருந்த விடுதி அறை உள்ளிட்ட அனைத்து அறைகளையும் ஆய்வு செய்தனர்.

மொட்டை மாடி

பின்னர் மாணவி விழுந்ததாக கூறப்பட்ட கட்டிடத்தின் 50 அடி உயரத்தில் உள்ள மொட்டை மாடிக்கு சென்று, அங்கிருந்து மாணவி கீழே விழுந்திருக்க கூடுமா? என்பது பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயபாபு, கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மாணவியின் பெற்றோரிடம் விசாரணை

முன்னதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழுவினர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மாணவி ஸ்ரீமதியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு மாணவியின் பெற்றோர் மற்றும் தம்பி சந்தோஷ் ஆகியோரிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தி விட்டு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்