தண்டவாள பராமரிப்பு பணியால் மும்பை- காரைக்கால் விரைவு ரெயில் 1¼ மணி நேரம் தாமதமாக கடலூருக்கு வந்தது பயணிகள் அவதி

தண்டவாள பராமரிப்பு பணியால் மும்பை- காரைக்கால் விரைவு ரெயில் 1¼ மணி நேரம் தாமதமாக கடலூருக்கு வந்தது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2022-10-09 18:45 GMT

தாமதமாக வந்தது

மும்பையில் இருந்து காரைக்கால் செல்லும் லோகமாண்ய திலக் வாரந்திர விரைவு ரெயில் கடலூருக்கு வழக்கமாக மதியம் 2.20 மணிக்கு வந்து செல்லும். ஆனால் நேற்று இந்த ரெயில் 1¼ மணி நேரம் தாமதமாக மாலை 3.40 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரெயில் நிலையத்தில் குடிநீர் குழாய்கள் இருந்தும் தண்ணீர் இல்லை. இதனால் ரெயில் பயணிகள் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர். வேறு வழியின்றி பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. அதன்பிறகு அந்த ரெயில் 25 நிமிடம் மேலும் தாமதமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் இருந்து சிதம்பரம் வழியாக காரைக்கால் நோக்கி சென்றது.

டீசல் என்ஜின் பொருத்தம்

இது பற்றி ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:- விழுப்புரத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக மின்சார பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விழுப்புரத்தில் மின்சார என்ஜினை மாற்றி டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது.

பின்னர் மும்பை- காரைக்கால் விரைவு ரெயில் டீசல் என்ஜின் மூலம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரை இயக்கப்பட்டது. அதோடு மின்சார என்ஜினும் சேர்த்து கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு மின்சார என்ஜினை பொருத்தி மீண்டும் ரெயில் இயக்கப்பட்டது. இது தான் காலதாமதத்திற்கு காரணம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்