நெல்லையில் காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை இறுக்கி கொன்ற தாய்...!

நெல்லை அருகே காதலை கைவிட மறுத்த மகளை அவரது தாயார் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2022-11-23 21:00 GMT

நெல்லை அருகே காதலை கைவிட மறுத்த மகளை அவரது தாயார் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவி

நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி. லாரி டிரைவரான இவருடைய மனைவி ஆறுமுகக்கனி (வயது 42). இவர்களின் மகள் அருணா (19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணா சொந்த ஊருக்கு வந்தார். நேற்று அவர் வீட்டில் பிணமாக கிடப்பதாக சீவலப்பேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கழுத்தில் காயம்

அப்போது, வீட்டில் பிணமாக கிடந்த அருணாவின் கழுத்தில் காயங்கள் இருந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டின் மற்றொரு பகுதியில் அருணாவின் தாயார் ஆறுமுகக்கனி இருந்தார். அவரது கையில் வெட்டுக் காயங்கள் இருந்தன. அவரையும் மீட்டு சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காதல் விவகாரம்

தொடா்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதுபற்றிய விவரம் வருமாறு:-

ேகாவையில் உள்ள கல்லூரியில் அருணா படித்தபோது அங்கு வேறு சாதி வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆறுமுகக்கனி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கோவைக்கு சென்றார். அங்கு தனது மகளின் படிப்பை பாதியில் நிறுத்தி அவரை ஊருக்கு அழைத்து வந்தார். அவரிடம் காதலை கைவிட குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

கழுத்தை இறுக்கி கொலை

மேலும் அருணாவுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைப்பதற்கான முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டனர். இதற்காக மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க நேற்று வருவதாக இருந்தது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவில் அருணாவுக்கும், ஆறுமுகக்கனிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகக்கனி வீட்டில் கிடந்த துப்பட்டாவால் அருணாவின் கழுத்தை இறுக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

தாய் தற்கொலை முயற்சி

மகளை கொன்ற பயத்தில் ஆறுமுகக்கனி வீட்டில் இருந்த கத்தியால் கையில் வெட்டியும், விஷம் குடித்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மேற்கண்ட தகவல் விசாரணையில் வெளிவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை அருகே காதலை கைவிட மறுத்த மகளை அவரது தாயே கழுத்தை இறுக்கி கொலை செய்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்