நெல்லை சிறையில் இறந்த புளியங்குடி வாலிபர் உடலை பெற்றுக்கொள்ள தாயார் சம்மதம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்த புளியங்குடி வாலிபர் உடலை பெற்றுக்கொள்ள அவரது தாயார் சம்மதம் தெரிவித்தார். கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.;

Update: 2023-06-22 18:45 GMT

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் மாடசாமி மகன் தங்கசாமி (வயது 26). இவர் மதுபாட்டில் விற்பனை செய்த வழக்கில் புளியங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 12-ந்தேதி தேதி அடைக்கப்பட்டார். அவர் கடந்த 14-ந்தேதி திடீரென உயிரிழந்தார்.

அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தங்கசாமி மரணம் தொடர்பாக புளியங்குடி போலீசார் மற்றும் பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், தங்கசாமியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன், நகர்மன்ற துணைத்தலைவர் அந்தோணிசாமி, கடையநல்லூர் தாசில்தார் கெங்கா, துணை தாசில்தார் சுடலையாண்டி, தங்கசாமியின் தாயார் கருப்பி, சகோதரர் ஈஸ்வரன் மற்றும் உறவினர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்,

அப்போது கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கூறுகையில், தங்கசாமி இறந்து இன்றோடு (நேற்று) 9 நாட்கள் ஆகிவிட்டது. நடைபெற்ற சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இறந்த தங்கசாமியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சமும், அவரது தாயாருக்கு முதியோர் உதவித்தொகையும் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணி வழங்கப்படும் என்றார்.

ராஜா எம்.எல்.ஏ. கூறும்போது, தங்கசாமியின் மரணம் வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு வழங்கும் ரூ.3 லட்சத்தோடு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தங்கசாமியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது தாயார் கருப்பி சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து தங்கசாமியின் உடலை இன்று (வெள்ளிக்கிழமை) காலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்