"நிலவில் மிக துல்லியமாக விண்கலத்தை தரை இறக்கி சாதித்தது இந்தியாதான்"-இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம்
நிலவில் மிக துல்லியமாக விண்கலத்தை தரை இறக்கி சாதித்தது இந்தியா தான் என ராமேசுவரத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.;
ராமேசுவரம்,
துல்லியமாக விண்கலத்தை...
ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பில் சந்திரயான்-3 வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், டாக்டர் சின்னதுரை அப்துல்லா, டாக்டர் ஜெயசுதா, பெங்களூரு செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனர் வெங்கடேஸ்வரசர்மா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்து கொண்டு பேசியதாவது:-
சந்திரயான்-3 விண்கலம் முழுமையாக இந்தியாவில் தயார் செய்யப்பட்டது. நிலவில் மிக துல்லியமாக விண்கலத்தை தரை இறக்கி சாதனை படைத்தது இந்தியா தான். இதற்கு முன்னோடி அப்துல் கலாம் தான். இஸ்ரோவில் பணியில் சேர்ந்த போது அப்துல்கலாமை நான் பலமுறை சந்தித்து பேசி உள்ளேன். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏறும்போது ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமை நேரில் சென்று சந்தித்தோம். அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அந்த ஆலோசனை அடிப்படையில் மீண்டும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவி வெற்றி பெற்றோம்.
கனவு காணுங்கள்
மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஒரு முறையாவது ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை இஸ்ரோவிற்கு நேரில் வந்து பார்க்க வேண்டும். தற்போது இந்தியா அதிக முன்னேற்ற பாதையில் வளர்ச்சி அடைந்த நாடாக இருந்து வருகின்றது. நமது நாட்டிலே செயற்கைக்கோளில் சேர்க்க தேவையான அனைத்து பாகங்களும் இந்தியாவின் 5 இடங்களில் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக கனவு காணுங்கள்.
கனவு காண்பதில் தான் நமது வெற்றி உள்ளது. அப்துல்கலாமே அதிகமாக சொல்வது அனைவரும் கனவு காணுங்கள் என்று தான். நிலவில் சந்திராயன் 3 விண்கலம் இறக்கப்பட்டுள்ளதாக பிரதமரிடம் நான் தெரிவித்தேன். அப்போது பிரதமர் என்னிடம் நிலவில் எப்போது ஒரு இந்தியரை கொண்டு போகப் போகிறீர்கள் என்று கேட்டார். விரைவில் நடக்கும் என தெரிவித்தேன். சந்திரயான்-10 அனுப்பும்போது கண்டிப்பாக நீங்கள் கூட யாராவது ஒருவர் அதில் இருக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கண்டுபிடிப்பு
இந்த நிகழ்ச்சியில் கலாமின் பேரன் சேக் சலீம் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்து வைத்திருந்த அறிவியல் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கண்டுபிடிப்புகளை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பார்வையிட்டார்.