பெண்களுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்த விவகாரம்: பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது..!
பாதிரியார் மீது இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.;
குமரி,
குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தின் சில தேவாலயங்களில் பணியாற்றி உள்ளார். அப்போது தேவாலயத்துக்கு வரும் சில பெண்களிடம் நெருங்கி பழகியுள்ளார்.
இந்தநிலையில் பெனடிக்ட் ஆன்றோ பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் சில பெண்களிடம் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வீடியோ கால் மூலம் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். முதலில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை.
இந்தநிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் தைரியமாக புகார் கொடுத்தார். அதன் பேரில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ சம்பந்தப்பட்ட தேவாலயத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். தலைமறைவாக உள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.