கல்லூரி மாணவியை கொலை செய்த தாய் மாமன் விஷம் குடித்து தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே கல்லூரி மாணவியை கொலை செய்த தாய்மாமன், விஷம்குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் ஒரே இடத்தில் உடல்களை புதைக்குமாறு வீடியோவில் பதிவு செய்துள்ளார்.;

Update: 2023-10-15 19:14 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜீவிதா (வயது 18). பர்கூரில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இவரது தாய் மாமன் சரண்ராஜ். நாட்டறம்பள்ளி பகுதியில் இரு சக்கர வாகன ஷோரூமில் டிரைவராக வேலைபார்த்து வந்தார்.

ஜீவிதாவும், சரண்ராஜும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரண்ராஜிடம் கடந்த சில மாதங்களாக ஜீவிதா பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சரண்ராஜ் நேற்று முன்தினம் ஜீவிதாவை, கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு, தப்பி ஓடி தலைமறைவானார்.

தாய்மாமன் கைது

மேலும் சரண்ராஜ் தானும், ஜீவிதாவும் நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், தற்போது தற்கொலை செய்து கொள்வதாகவும், இறந்த பின்பு ஒரே இடத்தில் உடல்களை புதைக்க வேண்டும் எனவும் செல்போனில் பேசி வீடியோவாக பதிவு செய்திருந்தார். கடிதம் ஒன்றும் எழுதி வைத்திருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரண்ராஜை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள டீ கடையில் சரண்ராஜ் அமர்ந்திருப்பதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படையினர் வெலக்கல்நத்தம் பகுதிக்கு விரைந்து சென்று சரண்ராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விஷம் குடித்து தற்கொலை

அப்போது அவர் விஷம் குடித்து விட்டதாக கூறியதால் உடனடியாக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்