மதுபோதையில் தகராறு:கொத்தனார் கம்பியால் அடித்துக்கொலை வாலிபர் கைது

மதுபோதையில் கொத்தனாரை கம்பியால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2023-02-27 18:45 GMT

நாகா்கோவில்:

மதுபோதையில் கொத்தனாரை கம்பியால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொத்தனார் கொலை

நாகர்கோவில் மூவேந்தர் நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துராஜா (வயது 58), கொத்தனார். இவர் சம்பவத்தன்று நள்ளிரவில் குடிபோதையில் மூவேந்தர் நகர் பகுதியில் நடந்து வந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் ஜெனித் (24) என்பவர் அங்கு வந்தார். அவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது.

அப்போது ஆத்திரமடைந்த கிறிஸ்துராஜா அங்கு கீழே கிடந்த கம்பியை எடுத்து ஜெனித்தை தாக்கினார். உடனே அந்த கம்பியை ஜெனித் பறித்து கிறிஸ்துராஜாவை தலை மற்றும் உடல் பகுதியில் சரமாரியாக தாக்கினார். இதில் கிறிஸ்துராஜா படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார். உடனே ஜெனித் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த கிறிஸ்துராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வாலிபர் கைது

இதை நேற்றுமுன்தினம் காலையில் அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே அவர்கள் கிறிஸ்துராஜா மகன் அகஸ்டின் சுதன் ராஜாவிடம் தெரிவித்தனர். அவரும், உறவினர்களும் சம்பவ இடத்துக்கு வந்து கிறிஸ்துராஜாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதையில் கிறிஸ்துராஜாவுக்கும், ஜெனித்துக்கும் இடையே தகராறு நடந்து ஒருவரை மற்றவர் தாக்கியதும், இதில் கிறிஸ்துராஜா உயிரிழந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜெனித்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

மதுபோதையில் தகராறு

அப்போது ஜெனித் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் கோட்டார் பகுதியை சேர்ந்தவன். தற்பொழுது மூவேந்தர் நகர் பகுதியில் வசித்து வருகிறேன். பீச்ரோடு பகுதியில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறேன். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது அங்கு கிறிஸ்துராஜா நின்று கொண்டிருந்தார். அவர் எங்கள் தெருவில் உனக்கு என்ன வேலை என்று கேட்டு மதுபோதையில் தகராறு செய்தார். திடீரென கம்பியால் என்னை தாக்கினார். இதனால் வலி தாங்க முடியாமல் நான் அவரை கம்பியால் தாக்கினேன். பின்னர் அங்கிருந்து நான் சென்று விட்டேன். நேற்றுமுன்தினம் கிறிஸ்துராஜா இறந்த தகவல் தெரிய வந்தது. உடனே நான் வீட்டில் இருந்து தலைமறைவாக சென்ற போது என்னை போலீசார் கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து போலீசார் ஜெனித்தை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ஜெனித் மீது ஏற்கனவே கோட்டார் போலீஸ் நிலையத்தில் அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட 3 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்