மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
பேராவூரணி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு சார்பில், பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர்வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மனோகரன், கருப்பையா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.குடிமனை பட்டா வழங்கியும், இதுவரை ஒப்படைக்காத பயனாளிகளுக்கு உடனடியாக நிலங்களை ஒப்படைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர், போலீசார் அங்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வருகிற 4-ந்தேதி அன்று தாசில்தார் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.