பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட வலியுறுத்தி மேலாண்மை குழுவினர் சாலை மறியல்

பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட வலியுறுத்தி மேலாண்மை குழுவினர் சாலை மறியல்;

Update: 2022-07-27 17:32 GMT

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 29-வது வார்டு மணிநகரில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய வகுப்பறை இல்லாததால் தமிழ் வழி கல்வியும், ஆங்கில வழி கல்வியும் ஒரே வகுப்பறையில் பயிற்றுவிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மேல்நிலைப்பள்ளிக்கான கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால், அந்த பகுதியில் மேல்நிலை கல்விக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியது உள்ளது.

இந்த நிலையில் நகராட்சி சார்பில் பள்ளிக்கு அருகில் உள்ள இடத்தில் ரூ.1 கோடியே 86 லட்சத்தில் அறிவுச்சார் மையம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் கஸ்தூரி, துணைத்தலைவர் இஸ்மாயில், குழு உறுப்பினர்கள், கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு அறிவுச்சார் மையம் அமைப்பதற்கு பதிலாக கூடுதல் கட்டிம் கட்டி, உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூறிவந்தனர். இந்த நிலையில் நேற்று கோரிக்கையை வலியுறுத்தி பள்ளி மேலாண்மை குழுவினர், பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், நகராட்சி உதவி பொறியாளர் அனிதா ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்