2 பேரை பிளேடால் வெட்டியவர் கைது
கடையநல்லூரில் 2 பேரை பிளேடால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.;
கடையநல்லூர்:
கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை (48) என்பவர் அப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப் பொருள் தாசில்தார் கைப்பற்றி எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளத்துரை, அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ரத்தினம் (46) என்பவர்தான் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாக கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வெள்ளத்துரை தனது கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் ரத்தினத்தின் கழுத்தை வெட்டியுள்ளார். அப்போது அம்பேத்கர் தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் கதிரேசன் (21) என்பவர் இதனை தடுத்துள்ளார். அப்போது அவரையும் பிளேடால் அறுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளத்துரையை கைது செய்தனர்.