அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயகன் பேட்டை ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி(வயது 65). இவர் குடும்பத்துடன் விவசாய கூலிவேலை செய்து வருகின்றார். இதே கிராமத்தில் உள்ள கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை என்கிற பொந்து செல்லதுரை(42) என்பவர் கடந்த 20-ந் தேதி இரவு 11 மணியளவில், வேலுச்சாமி வீட்டிற்கு சென்று அவருடைய சைக்கிளை மீன் பிடிக்க செல்வதாக கூறி சைக்கிளை வாங்கிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. வேலுச்சாமி மறுநாள் காலை 8 மணியளவில் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டு இருந்த செல்லதுரையிடம் சைக்கிள் எங்கே என்று கேட்டதாக தெரிகிறது. அதற்கு செல்லதுரை நான் உனது சைக்கிளை எடுக்கவில்லை எனகூறி அவரை சாதி பெயரை சொல்லி திட்டி அருகில் கிடந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த வேலுச்சாமி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து செல்லதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.