நகராட்சி மேல்நிலைப்பள்ளி பிரதான கட்டிடம் பாழடைந்து கிடக்கும் அவலம்

மயிலாடுதுறை நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி பிரதான கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-11-26 18:45 GMT

மயிலாடுதுறை நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி பிரதான கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி

மயிலாடுதுறை நகரில் 1876-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 146 ஆண்டுகளாக கல்வி பணியை வழங்கி வரும் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் பெருமைமிகு பள்ளியாக இன்றும் விளங்கி வருகிறது. தொடக்கத்தில் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என மாறி பின்னர் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இந்த பள்ளி பல சாதனையாளர்களை உருவாக்கி இன்றும் பழமை மாறாமல் காணப்படுகிறது.

கடந்த 1999-ம் ஆண்டு சுதந்திர போராட்ட தியாகி நாராயணசாமி பெயர் சூட்டப்பட்டு தற்போது தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது. புகழ் பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வன்' எழுதிய ஆசிரியர் கல்கி, முன்னாள் அமைச்சரும், தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகன், 'உன்னால் முடியும் தம்பி' இயக்கத்தின் நிறுவனர் எம்.எஸ்.உதயமூர்த்தி, தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சொக்கலிங்கம் உட்பட ஏராளமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும், கல்வியாளர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் உருவாக்கிய பெருமை இந்த பள்ளிக்கு உண்டு.

பாழடைந்து கிடக்கிறது

கடந்த சில ஆண்டுகள் 2 ஆயிரம் பேர் வரை படித்து வந்த இந்த பள்ளியில், தற்போது 650 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். தற்போது ஏழை எளிய மாணவர்கள் பெருமளவில் படிக்கும் இந்த பள்ளியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரதான கட்டிடம் சிதலமடைந்து செடி- கொடிகள் வளர்ந்து பாழடைந்து கிடக்கின்றது. மேலும் சுமார் 20 ஆயிரம் நூல்களை கொண்ட நூலகம் 23 ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடக்கின்றன. இந்த நூலகத்திற்குள் புத்தகங்கள் வீணாகி சேதமடைந்து, அதில் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வாழும் அறையாக மாறிவிட்டன. மேலும் பழுதடைந்த கட்டிடத்தின் அருகே உள்ள மாணவர்களுக்கான கழிவறை அருகே புதர்கள் மண்டி கிடக்கின்றன. அங்கு வெட்டப்பட்ட மர கிளைகள் கூட அகற்றப்படாமல் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் அடிக்கடி விஷ பாம்புகள் வந்து செல்கின்றன. இதுகுறித்து கல்வித்துறை மற்றும் நகராட்சி துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் தெரிவித்தனர்.

விஷபூச்சிகளால் ஆபத்து

மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேஷ் கூறுகையில், மயிலாடுதுறை நகரில் முதன் முதலில் வெள்ளையர்களால் தொடங்கப்பட்ட நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்த பலர் உயர் பதவிகளை அடைந்துள்ளனர். பெருமைமிகு இந்த பள்ளியில் பிரதான கட்டிடம் சரிவர பராமரிப்பின்றி படிப்படியாக சிதலமடைந்துவிட்டது. இதில் பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துகள் அதிக அளவில் நடமாடுகின்றன. பள்ளி மாணவர்கள் நடமாடும் பகுதியில் அடிக்கடி பாம்புகள், தேள் போன்ற விஷ பூச்சிகளும் நடமாடுகின்றன. இந்த விஷ பூச்சிகளால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சீரமைக்க வேண்டும்

மயிலாடுதுறையை சேர்ந்த குட்டி கோபி கூறுகையில், நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் பிரதான கட்டிடத்தில் தான் இயற்பியல், உயிரியல், விலங்கியல் ஆகிய அறிவியல் பிரிவுக்கான ஆய்வுக்கூடம் உள்ளது. தற்போது சேதமடைந்துள்ள இந்த கட்டிடத்திற்குள் மாணவர்கள் செல்ல இயலாத காரணத்தினால் ஆய்வுக்கூடமின்றி அறிவியல் துறை மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பொறியியல் துறை பிரிவிற்கும் தற்போது தொழிற்பயிற்சி கூடமும் கிடையாது. இதன் காரணமாக மாணவர்களுக்கு நேரடியாக எந்த பயிற்சியையும் அளிக்க முடியாமல் ஆசிரியர்கள் வேதனையுடன் உள்ளனர். எனவே பாரம்பரியமிக்க இந்த பள்ளியை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்