பெண்ணை கொலை செய்தவருக்கு விதித்த ஆயுள் தண்டனை உறுதி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து கொலை செய்தவருக்கு விதித்த ஆயுள் தண்டனை உறுதி என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
மதுரை:
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் கல்வெட்டாங்குழியை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 2013-ம் ஆண்டு விஜயதசமி நாளன்று பேச்சிப்பாறை அணை கால்வாயில் குளிக்கச் சென்றார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த பெண் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார்.
அவரை மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த பெண் கூச்சலிட்டதால் ஆத்திரம் அடைந்து அதே கால்வாயில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார்.
இந்த வழக்கில் மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் , ஹேமலதா ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கால்வாயில் குளிக்கச் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போது அந்த பெண் கூச்சலிட்டதால் அவரை கொடூரமாக மனுதாரர் கொலை செய்துள்ளார். கொலை செய்தற்கான சாட்சிகள், ஆதாரங்கள் டாக்டரின் வாக்குமூலம், மருத்துவ சான்று தெளிவாக உள்ளன. இதன் அடிப்படையில் கீழ் கோர்ட்டு தண்டனை வழங்கியுள்ளது.
ஆண்களின் ஆசைக்கு அடிபணியாததால் இது போன்ற குற்றங்கள் நடக்கின்றன. பெண்கள் மீதான காமம் ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிட்டது.
எனவே இந்த வழக்கில் குற்றவாளிக்கு தயவு காட்ட எந்த முகாந்திரமும் இல்லை. ஆகையால் மனுதாரருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.