தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த லாரி
வத்தலக்குண்டு அருகே, தடுப்புச்சுவரில் மோதி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து, திருப்பூருக்கு கழிவு துணி பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்றது. அந்த லாரியை, நாமக்கல்லை சேர்ந்த செல்வம் ஓட்டினார். வத்தலக்குண்டு-உசிலம்பட்டி சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. செக்காபட்டிக்கும், காந்திபுரம் பிரிவுக்கும் இடையே லாரி வந்தபோது அங்குள்ள தடுப்புச்சுவரில் மோதி லாரி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் செல்வம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து விருவீடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு வருடத்துக்கு முன்பு தான் அப்பகுதியில் சாலையின் மையப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. சாலையின் வளைவு பகுதியில் தடுப்புச்சுவர் இருப்பதால் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி விட்டது. கடந்த ஒரு வருடத்தில் 5 வாகனங்கள் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.