வண்டல் மண் ஏற்றி வந்த லாரிகளை பா.ம.க.வினர் திடீர் முற்றுகை
விருத்தாசலம் அருகே வண்டல் மண் ஏற்றி வந்த லாரிகளை பா.ம.க.வினர் திடீர் முற்றுகை;
விருத்தாசலம்
விருத்தாசலத்தை அடுத்த பாலக்கொல்லை கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டைக்கு தினந்தோறும் லாரிகளில் வண்டல் மண் எடுத்து செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அறிந்த பா.ம.க. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் பா.ம.க.வினர் நேற்று வண்டல் மண் ஏற்றி வந்த லாரிகளை திடீரென முற்றுகையிட்டனர். அப்போது ஏரியி்ல் இருந்து வண்டல் மண் எடுப்பதால் நீர் ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாகவும், ஏரியிலிருந்து எடுக்கும் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ஆலடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்ற பா.ம.க.வினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.