சிவகங்கை பஸ்நிலையம் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை சட்டமன்ற உறுதிமொழி குழு நேரில் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.;
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
பஸ் நிலையம் புனரமைப்பு
சிவகங்கையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் (பண்ருட்டி தொகுதி) தலைமையில், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை (பட்டுக்கோட்டை தொகுதி), அருள் (சேலம் மேற்கு தொகுதி), கருணாநிதி (பல்லாவரம் தொகுதி), மனோகரன் (நாங்குனேரி தொகுதி), ராமலிங்கம் (நாமக்கல் தொகுதி), வில்வநாதன் (ஆம்பூர் தொகுதி), சட்டமன்ற பேரவை இணை செயலாளா் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்கள் கலெக்டர் ஆஷாஅஜீத் மற்றும் அதிகாரிகளை சந்தித்து சிவகங்கையில் ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலையம் புனரமைக்கும் பணிகள், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டும் குண்டூரணி புனரமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
மருத்துவ கல்லூரி
இதை தொடர்ந்து, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 180 இருக்கை வசதிகள் கொண்ட கேலரிவகை விரிவுரை அரங்கத்தை பார்வையிட்டு மருத்துவ மாணவர்களிடம் மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து கலந்துரையாடினர். அதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு, மருந்தகம், தாய் சேய் நலப்பிரிவுகளின் செயல்பாடுகள் மற்றும் நோயாளிகளின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் உடைகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஈ.ஐ.டி. பாரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஆல்கஹால் மற்றும் பொட்டாஸ் உப்பு உற்பத்தி குறித்தும், தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கழிவு சேகரிக்கப்பட்ட பின் ஆவியாக்கப்பட்டு, கொதிகலனில் எரிக்கப்படும் முறைகள் குறித்து ஆய்வு செய்தனர். குறிப்பாக கொதிகலனில் இருந்து வெளிவரும் புகையின் அளவு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையவழி தொடர் கண்காணிப்பு நிலையத்துடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டனர்.
கீழடி அருங்காட்சியகம்
சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 2016-2017-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கட்டிடங்கள், அரசு திட்ட ஒதுக்கீட்டு மூலம் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள், 2 ஆய்வக கட்டிடங்களின் நிலை குறித்தும், மாணவர்களின் நலன் கருதி கல்லூரியில் மேம்படுத்த வேண்டிய வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தனர். கீழடி அருங்காட்சியகத்தில் மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கீழடியில் சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக்கூடங்கள் அமைப்பதற்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள அரசால் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அகழ் வைப்பகத்தின் ஒரு பகுதியில் சிறப்பு நூலகம் அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது. திருப்புவனம் பூவந்தியில் மேற்கொண்ட ஆய்வை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன்ஆய்வு நடத்தினர்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மானாமதுரை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., காரைக்குடி மாங்குடி எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சட்டமன்ற பேரவையின் இணைசெயலாளர் கருணாநிதி, துணைசெயலாளர் ரவி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள், அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.