அதிகாலையில் திடீரென உடைந்த ஏரி.. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரால் பொதுமக்கள் அவதி
மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் நடுவரப்பட்டு பகுதியிலுள்ள ஏரி நிரம்பி வழிந்தது.;
காஞ்சிபுரம்,
மிக்ஜம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நடுவரப்பட்டு பகுதியிலுள்ள ஏரி நிரம்பி வழிந்தது. அந்த பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் இந்த ஏரியின் மூலம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென இந்த ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. மேலும் அதிகாலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து வெளியேறினர்.
மர்மநபர்கள் யாரும் ஏரியை உடைத்தனரா..? அல்லது ஏரிக்கரை தானாக உடைந்ததா..? என்பவை குறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஏரி உடைப்பால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.