தொடர் கனமழையால் எடப்பாடி பெரிய ஏரி நிரம்பியதுவிவசாயிகள் மகிழ்ச்சி

எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், பெரிய ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-09-26 20:45 GMT

எடப்பாடி

எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், பெரிய ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர் மழை

எடப்பாடி நகரின் தெற்கு எல்லையில் எடப்பாடி பெரிய ஏரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு அருகில் உள்ள சூரியன்மலை, தேவண்ண கவுண்டனூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து வரும் மழைநீரும் மற்றும் சரபங்கா நதியின் உபரி தண்ணீரும் நீர் ஆதாரமாக உள்ளன. இந்த ஏரி அருகில் உள்ள 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு பாசன நீராதாரமாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள உள்ளூர் நீர்நிலைகள் நிரம்ப தொடங்கி உள்ளன.

நிரம்பியது

தொடர் மழையால் எடப்பாடி பெரிய ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது. இதன்காரணமாக ஏரி மறுகால் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. ஏரி நிரம்பி உள்ளதால் இப்பகுதியில் நெல், பருத்தி உள்ளிட்ட பயிர் வகைகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.தொடர்ந்து ஏரிக்கு உபரிநீர் அதிகளவில் வருவதால் மறுகால் செல்லும் தரைப்பாலம் வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளது. ஏரியின் மறு கரையில் உள்ள செட்டிக்காடு, நண்டுக்காரன் காடு, சரிபாறைக்காடு, மொரம்புக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே ஏரிக்கரையை கடந்து செல்லும் சூழல் உருவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்