கும்பகோணம் மீன் மார்க்கெட்டுக்கு அதிக அளவு வெளிமாநில கடல் மீன்கள் வந்தன
கும்பகோணம் மீன் மார்க்கெட்டுக்கு அதிக அளவு வெளிமாநில கடல் மீன்கள் வந்தன
கும்பகோணம் மீன் மார்க்கெட்டுக்கு வெளிமாநில சரக்கு வேன்களில் அதிக அளவு கடல் மீன்கள் வந்ததால் நாட்டு மீன்கள் விற்பனை பாதித்தது.
வெளிமாநில மீன்கள்
கும்பகோணம் நால்ரோடு பகுதியில் தந்தை பெரியார் மீன் அங்காடி உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள் பல்வேறு வகையான மீன்களை வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்த அங்காடியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் மீன் வாங்க வருகின்றனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை ஏராளமான மீன் பிரியர்கள் மீன் வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கம்.
இதனால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கும்பகோணம் மக்களுக்கு அதிக அளவு மீன் தேவைப்படுகிறது. நேற்று ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வேன்களில் ஏராளமான கடல் மீன்கள் விற்பனைக்கு வந்தன.
நாட்டு மீன்கள் விற்பனை பாதிப்பு
குறிப்பாக செங்காளை, மத்தி, வஞ்சனை, கொடுவா உள்ளிட்ட பல்வேறு வகையை சேர்ந்த மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதனால் கும்பகோணம் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்பட்ட நாட்டு மீன்களின் விற்பனை பாதித்தது. குறிப்பாக கட்லா, ரோகு உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் விற்பனை குறைந்தது. இதன் காரணமாக கும்பகோணம் வட்டார பகுதியை சேர்ந்த மீன் வியாபாரிகள் தங்களது மீன்களை சரக்கு வேன் மூலம் அந்தந்த கிராமங்களில் உள்ள தெருக்களில் போட்டு விற்பனை செய்தனர்.
கட்டண விகிதங்களை அதிகரிக்க வேண்டும்
இதுகுறித்து நாககுடி கிராமத்தைச்சேர்ந்த சிவா கூறியதாவது:
கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் வெளிமாநில மீன்கள் விற்பனையை முறைப்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும். வெளி மாநில கடல் மீன்கள் அதிக அளவு விற்றால் கும்பகோணம் அருகே உள்ள கிராமங்களில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள எங்கள் மீன் உற்பத்தி தொழில் நலிவடைய தொடங்கும். எனவே அரசு வெளி மாநில மீன்களை முறைப்படுத்த கட்டண விகிதங்களை அதிகரிக்க வேண்டும் என்றார்.