நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேரை ஏமாற்றிய 'கல்யாண ராணி'
‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழகி காதல் வலை வீசி சேலம் நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேரை ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் தேடி வருகின்றனர்.;
சேலம்,
சேலம் மாவட்டம் எம்செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 'இன்ஸ்டாகிராம்' மூலம் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த ரசிதா என்ற பெண் அறிமுகம் ஆகியுள்ளார். அழகு கலை நிபுணரான இவர் தனது பல்வேறு ரீல்ஸ்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.
இதனிடையே அவரது ரீல்சை மூர்த்தி பார்த்து லைக் செய்வதை அறிந்த, அந்த அழகி, ஒரு கட்டத்தில் ஹாய் மெசேஜ் அனுப்பி மூர்த்திக்கு இணையதளம் மூலம் வலை வீசி உள்ளார். முதலில் தான் கஷ்டத்தில் இருப்பதாக தன் மீது இரக்கம் வரும் வகையில் 'இன்ஸ்டாகிராம்' மூலம் ரசிதா பேசி உள்ளார். அவரது பேச்சில் மயங்கிய மூர்த்தி தான் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்ற விவரத்தை தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து இருவரும் ஒத்த கருத்துடன் உள்ளோம், காதல் திருமணம் செய்தால் என்ன என்று ரசிதா காதல் வலைவீசவே அதில் மூர்த்தியும் மயங்கி காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இருவரும் இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்துள்ளனர்.
திருமணம்
கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி இருவரும் சேலம் மாவட்டம், ஓமலூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக எம்.செட்டிப்பட்டியில் உள்ள மூர்த்தி வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கிராமத்துக்கு வாழ வந்தாலும், தனது மாடர்ன் உடை உடுத்தும் கலாசாரத்தை அவர் கைவிடவில்லை. அவர் வழக்கம் போலவே மாடர்னாக வலம் வந்துள்ளார்.
திருமணம் ஆகி 3 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கடந்த 5-ந் தேதி காலையில் திடீரென ரசிதா வீட்டில் இருந்து மாயமானார். மேலும் வீட்டில் இருந்த ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் 4 பவுன் தங்க நகை ஆகியவற்றையும் அவர் எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி, ரசிதாவின் அக்காள் மகனை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது ரசிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து மூர்த்தியை திருமணம் செய்து கொண்ட விவரத்தை மூர்த்தியிடம் அவர் கூறியதாக தெரிகிறது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மூர்த்தி, ரசிதாவின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், நகை மற்றும் பணத்தை மீட்டு கொடுக்க கோரியும் தொளசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் நண்பருடன் கோவையில்?
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ரசிதா ஊட்டியில் 2 ஆண்களை திருமணம் செய்து விட்ட நிலையில், 3-வதாக நிதி நிறுவன அதிபர் மூர்த்தியை ஏமாற்றி திருமணம் செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தற்போது அவர் மேலும் ஒரு ஆண் நண்பருடன் கோவை பகுதியில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் அவரை பிடிக்க தனிப்படை அமைத்து அங்கு விரைந்துள்ளனர்.