சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது
பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது.
பலூன் திருவிழா
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பலூன் திருவிழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நேற்று 8-வது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது.
வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பலூன்களுடன், தமிழக சுற்றுலா வளர்ச்சி துறையின் பலூனும் வானில் பறந்தது. கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தனது மனைவியுடன் ராட்சத பலூனில் நேற்று பறந்தார். மேலும் சுற்றுலா பயணிகள் ராட்சத பலூனில் பறந்து பொள்ளாச்சியில் அழகை வானில் இருந்தபடி ரசித்தனர். பொள்ளாச்சி சுற்று வட்டார பொதுமக்கள் காலையில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் பலூன் பறப்பதை பார்க்க திரண்டு வந்தனர்.
சர்வதேச பலூன் திருவிழா குறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியதாவது:-
பொள்ளாச்சி தேர்வு
உலக நாடுகளில் இருந்து பலூன்களும், விமானிகளும் வந்து உள்ளனர். 8 நாடுகளில் இருந்து 10 பலூன்கள் பறக்க விடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை விளக்கும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது. பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த பிறகு பொள்ளாச்சி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. காற்றின் வேகம், சமதளம், இயற்கை சூழல் போன்றவை அடிப்படையாக கொண்டு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பலூன் திருவிழா மூலம் கோவை, பொள்ளாச்சி போன்ற பகுதிகள் சுற்றுலா இடத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமையும். பொள்ளாச்சி பகுதியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
3 நாட்கள் நடக்கிறது
தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் சிறப்புகளை உலக மக்களிடம் கொண்டு செல்லும் கவன ஈர்ப்பு நிகழ்ச்சியாக பொள்ளாச்சியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச பலூன் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் மட்டுமே நடைபெறும் இந்த பலூன் திருவிழா சுற்றுலாத்துறை சார்பில் இந்த ஆண்டு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் உள்ள மைதானத்தில் சர்வதேச வெப்ப பலூன் திருவிழா தொடங்கி உள்ளது.
இதுவரைக்கும் தனியார் சார்பில் பலூன் திருவிழா நடந்து வந்தது. தற்போது முதல் முறையாக சுற்றுலாத்துறை சார்பில் பொள்ளாச்சியில் சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா வருகிற 15-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
100 அடி உயரம் கொண்ட பலூன்
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நெதர்லாந்து, கனடா, பெல்ஜியம், ஸ்பெயின், வியட்நாம், பிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து ராட்சத வெப்ப காற்று பலூன்களை கொண்டு வந்து இங்கே பறக்க விடப்பட்டு உள்ளது. இந்தியா சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறையின் பலூன் பறக்க விடப்பட்டு உள்ளது. பலூன் திருவிழா நடைபெறும் மைதானத்தில் இருந்து குறிப்பிட்ட உயர்த்தில் வானில் இருந்தபடி பொள்ளாச்சியின் அழகை ரசிக்கலாம். மேலும் ஹெலிகாப்டர் பறந்தும் பொள்ளாச்சியின் அழகை காணலாம் இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது.
மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சியும், குழந்தைகளுக்கான விளையாட்டுக்களும் இடம் பெற்று உள்ளன. இந்த ஆண்டு 10 பலூன்கள் பறக்க விடப்பட்டு உள்ளன. இவற்றின் சராசரி உயரம் 60 அடி முதல் 100 அடியாகும். 3 பலூன்கள் ஒரு சிறப்பு வடிவத்தை கொண்டு உள்ளன. அதன்படி ஒன்று பிரேசில் நாட்டு டினோ பலூன் டைனோசரை போலவும், பெல்ஜியத்தை சேர்ந்த ஸ்மர்ப் பலூன் கார்ட்டூன் போலவும், கனடாவை சேர்ந்த பலூன் புளு பியர் கரடி போலவும் இருக்கும். இந்த பலூன்களை இயக்குவதற்கு ஒரு பெண் விமானி உள்பட உலகம் முழுவதும் இருந்து விமானிகள் பொள்ளாச்சிக்கு வந்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.