அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு முட்டாள் தனமானது - ஆர்.எஸ் பாரதி

அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வை திட்டமிட்டு செய்துள்ளனர் என்று ஆர்.எஸ் பாரதி விமர்சித்துள்ளார்.

Update: 2024-09-06 11:11 GMT

சென்னை,

சென்னை தேனாம் பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ;

அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வை திட்டமிட்டு செய்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பள்ளி கல்வியின் தரத்தை குறித்து பேசியதற்கும் இந்த நிகழ்வுக்கும் பின்னணி உள்ளது. அதனை அறிந்து புரிந்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது போன்ற சில புல்லுருவிகள் வருவார்கள். இது போல் இனி நடைபெறாமல் அனைவரும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் இந்த பொறுப்பு உள்ளது. அரசின் கவனத்திற்கு வராமல் இது போல் செய்வது உண்டு. இது போல் எங்காவது நடந்த அரசு கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.அமைச்சரின் பேட்டி உள்ளிட்டவற்றை பார்க்கும் போது இனி இது போன்ற நிகழ்வு நிச்சயம் நடைபெறாது என உறுதியாக நம்பலாம். அது முட்டாள் தனமான நிகழ்வு. இது தன்னம்பிக்கை நிகழ்வு அல்ல. பகுத்தறிவு உள்ள எந்த மனிதரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ்நாடு, கல்வியில் சிறந்து இந்தியாவில் முதல் இடம் பெற்றுள்ளதை ஜீரணிக்க முடியாமல் சில சக்திகள் இதனை கெடுக்க வேண்டும் என செயல்படுகிறார்கள். இது போன்ற மூட நம்பிக்கைகள், தவறான கருத்துகள் நுழைவதற்கு அனுமதிக்க மாட்டோம்.கல்வி நிலையங்களில் ஆன்மீகம் குறித்து பேசக்கூடாது. அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போது அரசு நிறுவனங்களில் எந்த படமும் இருக்க கூடாது என சட்டம் கொண்டுவந்தார். ஆன்மிகத்தை பேசுவதற்கு என தனியான தளங்கள் உள்ளன. கல்வி நிலையங்களில் ஒரு காலமும் அனுமதிக்க முடியாது" இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்